சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் நேரில் சந்தித்தனர். அப்போது கரோனா நிவாரண நிதியாக 50 லட்சம் ரூபாயை அவர்கள் வழங்கினார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது, "முதலமைச்சரிடம் திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து விட்டு அதற்கு ஏற்றார் போல் வரும் காலங்களில் திரையரங்குகள் திறக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதேபோல வருடந்தோறும் திரையரங்கு உரிமம் புதுப்பிக்கும் நடவடிக்கையை நீடித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளோம். தொலைக்காட்சி, சிடி, ஓடிடி தளங்கள் என எது வந்தாலும் மக்கள் திரையரங்குகளில் படம் பார்ப்பதே விரும்புகின்றனர். திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் திரைப்படங்கள் ஓடிடி தளங்களுக்கு செல்லாமல் திரையரங்குகளுக்கே மீண்டும் வரும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் திரை அரங்கில் டிக்கெட் விலை குறைவாக உள்ளது. இங்கு தான் ஜிஎஸ்டி வரி உள்பட ரூ.150க்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: ‘திரையரங்களை மூடப்போவதில்லை’- திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்!