'உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும், எத்தனை நாள் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது' என திமு கழகத்திலிருந்து கலகக் குரல் எழுப்பினார் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. அவரது இப்பேச்சு திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக விரும்புகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியை திமுகவிற்கு விட்டுத்தருமாறு மேடையிலேயே திருநாவுக்கரசரிடம் கோரிக்கை வைத்தார்.
இதனால் காங்கிரசுக்கு முட்டுக்கட்டை போடுகிறதா திமுக என அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் இதனை உறுதிப்படுத்துவது போன்று கே.என். நேருவின் பேச்சு அமைந்தது.
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் அதை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு காங்கிரஸ் குழு இரண்டு ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் கே.எஸ். அழகிரி, உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும், உள்ளாட்சித் தேர்தலை சேர்ந்து சந்திப்பதில் எங்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லை என்று கூறினார்.
இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிட்டது.
பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு காங்கிரஸ் 10 தொகுதிகளைப் பெற்றது. மேலும் திருச்சி, தேனி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பையும் காங்கிரஸ் கட்சி பெற்றிருந்தது. இதனால் திமுக நிர்வாகிகள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டது. குறிப்பாக கே.என். நேரு வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
மேலும் உள்ளாட்சித் தேர்தல் என்று வரும்போது கட்சியின் தலைமையை பார்த்து வாக்களிப்பதை விட வேட்பாளரின் செல்வாக்கு, நன்மதிப்பு இவற்றை பொறுத்தே மக்கள் வாக்களிப்பது வழக்கம். இந்த மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு தமிழ்நாடு மக்கள் ராகுல் காந்தி தலைமைக்கும், அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தியதற்கும் கிடைத்த வாக்குகளே என்று கதர்சட்டைக்காரர்கள் கூறினாலும் களநிலவரம் என்பது கூட்டணி பலத்தாலும், தமிழ்நாட்டில் நிலவும் பாஜக எதிர்ப்பலையாலும்தான் சாத்தியமானது என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தற்போது மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ராகுல் காந்தி தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அடம்பிடித்துவருகிறார். ராகுல் தலைமை இல்லாத காங்கிரசை தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் ஏற்கனவே அக்கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூசல் வலுவடைந்து மக்கள் மன்றத்திலும் பிரதிபலிக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதை அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குவது என்பது அதிமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கக் கூடலாம்.
இதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் இருக்கும் குறைவான வாக்கு வங்கியும் முக்கியக் காரணம். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் ஐந்து தொகுதிகளையே கைப்பற்றி திமுகவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 4.3 விழுக்காடு வாக்குகளையே பெற்றது. அதுபோல் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இதன்மூலம் சராசரியாக காங்கிரசுக்கு குறைந்த வாக்கு விழுக்காடே தமிழ்நாட்டில் உள்ளது என்பது தெரியவருகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு குறைவான தொகுதிகளை அளித்து, திமுக அதிக தொகுதிகளில் நின்றிருந்தால் ஆட்சியமைத்திருக்கலாம் என உடன்பிறப்புகள் புலம்புவது கேட்கத்தான் செய்கிறது.
இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தற்போது மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி அடைந்த படு தோல்வி, எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது போன்றவை அக்கட்சிக்கு பின்னடைவாக உள்ளது. அதுமட்டுமின்றி கீழ்மட்டத்தில் திமுகவின் அடித்தளம் என்பது மிகவும் வலிமை வாய்ந்ததாக உள்ளது.
அதிமுக கட்சியை உள்ளாட்சித் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதால் காங்கிரசுக்கு அதிக இடங்களை கொடுக்க தயக்கம் காட்டுகிறது திமுக என்பது அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது. இதற்கு காங்கிரஸ் செவி சாய்க்கவில்லை என்றால் திமுக உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் காது கேட்காதது போன்று தான் நடிக்கும் என்கின்றனர்.