சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றும் பெண் பரிசோதகரான அக்ஷயாதான் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெரம்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவரிடம் பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாததால் தனியாக அழைத்துச் சென்ற அக்ஷயா, அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என கூறிய அந்த இளைஞர், தான் ரயில்வே எல்லையைத் தாண்டிதான் நின்றதாகவும், இதனால் பணம் செலுத்த தேவையில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விசாரணையின்போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் இந்தியில் பேசுமாறு அந்த இளைஞர் கூறுகிறார். இதற்கு "நீ தமிழில் பேசு, இது என்னுடைய ஊர்" என பதில் கொடுக்கிறார் அக்ஷயா. இதனைத் தொடர்ந்தும் அபராதம் தொடர்பான வாக்குவாதம் நீண்டது.
பேச்சுவார்த்தையின் இடையே ஆவேசமான அக்ஷயா, தன் இருக்கையிலிருந்து எழுந்து அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்தார். அங்கிருந்த பயணி ஒருவர் இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா மற்றும் அவரது சக அதிகாரி ஹரிஜான் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து தெற்கு ரயில்வே துணை மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.