சென்னை: பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதில் வணிகவரித் துறை மூலம் பெறப்படும் வரி வருவாய் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் விதத்தில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வணிகவரித் துறை புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப் பணிக் குழுக்களைக் கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களைத் தணிக்கை செய்யும் பணியினை திறம்படச் செய்வது போன்ற பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி 10.01.2022 முதல் 13.02.2022 வரை முடிவடைந்த ஐந்து வாரக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலமாக 59118 வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 73557 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு 1583 இனங்களில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வரி/தண்டத்தொகையாக ரூ. 12.91 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் எவ்வித ஏய்ப்புகளும் இன்றி வசூல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் இத்தகைய தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வணிக வரித்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணம்!