சென்னையின் ஐசிஎஃப் சிக்னல் அருகே மழைநீர் வடிகால்வாய்க்காக பள்ளம் தோண்டும் பணி நேற்று நடைபெற்றது. மாநகராட்சியின் ஒப்பந்த ஊதிய அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அருண் குமார் (27), கொளத்தூரைச் சேர்ந்த கண்ணன் (50) மற்றும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (35) ஆகிய மூன்று பேர் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மூவரையும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் மயக்கமடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அருண் குமார் 52 சதவீத பாதிப்புகளுடனும், கண்ணன் 79 சதவீத பாதிப்புகளுடனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றொரு நபரான பாலமுருகனும் 23 சதவீத பாதிப்புகளுடன் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக ஐ.சி.எஃப் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த காண்ட்ராக்டர் பார்த்தசாரதி(65), சூப்பர்வைசர் பன்னீர்செல்வம், மற்றும் ஜே.சி.பி ஓட்டுனர் ஜெயபாலன் (26) ஆகிய 3 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதன்பின் பொது சொத்தை சேதப்படுத்துதல், கவனக் குறைவாக செயல்பட்டு மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், இயந்திரங்களை கவனக் குறைவாக கையாளுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல மழைநீர் வடிகால்வாய் ஒப்பந்ததாரரான ராமச்சந்திரன் என்பவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நள்ளிரவில் பாஜக பிரமுகர் கார் எரிப்பு... ஈரோட்டில் பரபரப்பு...