சென்னை ராயபுரம் ரங்கப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துவரும் இவர், தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 6) மதியம் தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமராக்களை காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து ராயபுரம் உதவி ஆணையர் உக்கிரபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து இருசக்கர வாகனத்தைத் தேடினர்.
தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, என்ஆர்டி மேம்பாலம் அருகே உள்ள பார்க் பகுதியில் இருசக்கர வாகனம் திருடியவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் பதுங்கி இருந்த கிஷோர் (18), கார்த்திகேயன் (19), ஐயப்பன் (19) உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.