சென்னை: திருவல்லிக்கேணி தேவராஜன் தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் அப்துல் ரஹிம் (58), பாத்திமா (52) தம்பதி.
இவர்களது மகன் நஹீத் (22). இவர்களது வீட்டில் கடந்த 16ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூவரும் படுகாயமடைந்தனர்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
மூவர் உயிரிழப்பு
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மூவரும் இன்று (ஜூலை 20) ஒருவர் பின் ஒருவராக சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!