சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் கடந்த 10ஆம் தேதி நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மூன்று நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறித்துச் சென்றனர். இதனையடுத்து உடனடியாக அந்தப் பெண் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். குறிப்பாக, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவியை கைப்பற்றினர். ஆனால், எந்தவித துப்பும் கிடைக்காததால், இதேபோல் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்துகொண்டு கொள்ளையர்கள் செல்லும் ராஜா அண்ணாமலைபுரம் முதல் எண்ணூர் வரையிலான சிசிடிவிகளை காவல் துறையினர் ஆராய்ந்தனர்.
பின்னர் கைபற்றிய சிசிடிவியை வைத்து நடத்திய விசாரணையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் கூட்டாளிகள் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட புளியந்தோப்பைச் சேர்ந்த அபி (21), நஜீர் (20) சிட்லபாக்கம் அஜய் ராகுல் (20) ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
இரு பிரிவாக பிரிந்து சென்னையில் விடியற் காலையில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் மற்றும் ஆட்டோ, பேருந்துகளில் ஓரமாக அமர்ந்து செல்லும் பெண்களிடம் இவர்கள் செயின் பறிப்பில் ஈடுபடுவது வழக்கம். மாதவரம், வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், அபிராமபுரம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுமட்டுமில்லாமல் எம்.கே.பி நகர், ராயபுரம், திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருட்டிலும் இந்த கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது.
ஊரடங்கு நாட்களில் மட்டும் செயின் பறிப்பு, இருசக்கர வாகன திருட்டு என 13க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர்கள் மீது நிலுவையில் உள்ளன. இவர்களிடமிருந்து எட்டு சவரன் தங்க நகை மற்றும் எட்டு இருசக்கர வாகனங்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:இருசக்கர வாகனத் திருட்டு; செக்யூரிட்டியை தாக்க முயன்ற திருடர்களின் பரபரப்பு காணொலி