சென்னை: பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர், மதனகோபால் என்ற பல்லு மதன் (46). 'ஏ' பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர், பாஜகவில் சேர்ந்து சென்னை கிழக்கு மாவட்ட பட்டியலணித் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி மாலை 5.30 மணியளவில், அவரது வீட்டிற்கு வந்த 15க்கும் மேற்பட்டோர், பல்லு மதனை கொலை செய்வதற்காக தேடியபோது, வீட்டில் இல்லாததால் அவரது மனைவியை தள்ளி விட்டு விட்டு, உன் கணவனைக் கொன்று விடுவோம் என மிரட்டி விட்டு பெட்ரோல் குண்டை வீட்டிற்கு வாசலில் வீசிவிட்டுச் சென்றதாக கூறுகின்றனர்.
மேலும், பயங்கர சத்தத்துடன் வெடித்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது. அதனைத் தொடர்ந்து, இச்சம்பம் குறித்து தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை காவல்துறையினர், சம்பவ இடத்தில் கிடைத்த பாட்டிலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் முதற்கட்டமாக நேற்று முன்தினம் மயிலை பாலாஜி நகரில் பிரசாந்த் என்பவர் கொலை நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணையைத் துவங்கிய காவல் துறையினர், மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்த அபினேஷ் (18), தினேஷ் (28), தீபன்ராஜ் (19) ஆகிய மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "தங்களது நண்பர் பிரசாந்த்தை கொலை செய்த கொலையாளிகளை, காவல் நிலையத்தில் சரணடைய உதவியதால், பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக" வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.