சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த மூதாட்டி சுதா ஸ்ரீதரனிடம், கடந்த 2019ஆம் ஆண்டு செல்போன் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகமாகினர்.
அப்போது அவர்கள், "இறந்துபோன கணவரின் இன்சூரன்ஸ் பணம் நிலுவையில் இருக்கிறது. அதை நாங்கள் பெற்றுத் தருவதாகக் கூறி, அவரை நம்ப வைத்துள்ளனர். இதனை நம்பி அவர் தனது வங்கி கணக்கிலிருந்து 2 கோடியே 6 லட்சம் ரூபாய் பணத்தைச் முன் பணமாக செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள், சுதா ஸ்ரீதரன் தொடர்பைத் துண்டித்துள்ளனர்.
இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுதா, சென்னை ஆணையரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் டெல்லியில் வசிக்கும் அமன் பிரசாத் உள்பட மோசடி கும்பலை சேர்ந்த ஆறு நபர்களையும் சிம்ரன்ஜித் என்பவரையும் கைது செய்தனர்.
மேலும் டெல்லியில் முகாமிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தலைமறைவாக இருந்த ஹன்சிகா சிவானி (எ) பிரியா சர்மா, அமித் குமார், அக்ஷத் குப்தா ஆகிய மூவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து, சிறையில் அடைத்தனர்.
ஹன்சிகா சிவானியிடம் மேற்கொண்ட விசாரணையில், "நான் பிரியா சர்மா என்ற பெயரில் வங்கி கணக்கு தொடங்கி அந்த கணக்கு மூலம் எனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சுதா ஸ்ரீதரனை ஏமாற்றி பணம் பெற்றுக்கொண்டோம்.
எங்களுடன் செயல்படும் ரவி சர்மா தலைமறைவாக இருக்கிறார். அவருடன் இணைந்து மோசடி செய்த பணத்தை வைத்து, பியர்ல் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் மூலம் உலர்கணிகள் முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்ற பொருள்களை மொத்த வியாபாரிகளிடம் பாதி பணத்தைக் கொடுத்து கொள்முதல் செய்வோம்.
விற்பனை செய்தவுடன் வியாபாரிகளிடமும் மீதி பணத்தை தராமல் பல கோடி ரூபாய் வரை ஏமாற்றியுள்ளோம்" என வாக்குமூலம் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைத் தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக கிடைக்கும் - பேராசையால் ரூ. 3 லட்சத்தை இழந்த கர்ப்பிணி