தமிழ்நாடு அரசியலும் தைலாபுரத் தோட்டமும்
தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத இடங்கள் மூன்று. அதில் போயஸ் தோட்டமும், கோபாலபுரமும், ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்குப் பின் களையிழந்து விட்டாலும், தைலாபுர தோட்டம் மட்டுமே இப்போதும் ஆக்டிவாக உள்ளது. ராமதாஸ் தைலாபுர தோட்டத்திலிருந்து வெளியிடும் அறிக்கைகளைக் கண்டு ஆளும் அரசுகள் அச்சம் கொள்ளும். அந்த அளவுக்குப் புள்ளி விவரங்களைக் கொண்டு கேள்விக் கணைகளைத் தொடுத்திருப்பார்.
1951இல் வன்னிய குல ஷத்திரிய சங்கம், ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியர்களுக்கென்று ஒரு கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக, அன்றைய வட ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார். தென்னாற்காடு, சேலம் மாவட்டத்தில் இருந்த வன்னியர்கள், ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இவ்விரு கட்சிகளுமே இன்றைய பாமகவின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் பாமகவும் ஒன்றாகும். இக்கட்சியை 1989இல், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) என்னும் அரசியல் கட்சியாக மாறியது.
சத்தியம் இன்னும் சத்தியமாகவே
பாமக தொடங்கப்பட்டபோது அதன் முன்னணி நிர்வாகிகளாக இருந்து முக்கிய பதவி வகித்த பலர் இப்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு பாமக என்னும் இயக்கத்தை தன்வயப்படுத்திக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். தனது குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று ராமதாஸ் செய்து கொடுத்த சத்தியம், அவராலேயே எப்போதோ காற்றில் பறக்கவிடப்பட்டது.
அன்புமணி எனும் நான்
அன்புமணி ராமதாஸ் அரசியலுக்கு வந்தது குறித்து கேட்டால் அது தனது தனிப்பட்ட விருப்பம் இல்லை என்றும் கட்சியின் முன்னணித் தலைவர்கள் எடுத்த முடிவு என்றும் அதற்குத்தான் கட்டுப்பட்டேன் என்றும் கூறுகிறார். ஆனால் அவர் கூறுவது முன்னணித் தலைவர்களின் விருப்பமா இல்லை தந்தையின் விருப்பமா என்பது தைலாபுரத் தோட்டத்திற்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
பாமகவின் கொள்கை
'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை' என்ற சொல்லாடல் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ராமதாஸுக்கு கச்சிதமாகப் பொருந்தும். தொடர்ந்து திராவிடக் கட்சிகளின் கொள்கை, தேசியக் கட்சி கொள்கை குறித்தெல்லாம் கடும் விமர்சனம் வைக்கும் அவர், தேர்தல் காலம் நெருங்கும்போது தனது களத்தையும், கருத்தையும் மாற்றிக்கொண்டு அவர்களுடன் சீட்டுகளுக்காக முஷ்டி முறுக்கிக்கொண்டிருப்பார்.
ஒரு கட்சியை எதிர்த்து நாள் முழுவதும் அறிக்கை வெளியிடுவார். ஆனால் அன்றைய நாள் முடிவதற்குள்ளாகவே அக்கட்சியுடனான கூட்டணி ஒப்பந்தத்தை வெளியிடுவார்.
'கார் உள்ளவரை, பார் உள்ளவரை திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை' என்று கூறிய அதே ராமதாஸ்தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் கார்களை தைலாபுரத் தோட்டத்துக்கு வரவேற்றார். அரசியலில் காட்சிகள் மாறுவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், அந்தக் காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதுதான் அசாதாரணமான ஒன்று. அந்த காரியத்தை கனகச்சிதமாக ராமதாஸ் செய்துகொண்டிருக்கிறார் என்கின்றனர் ஒரு தரப்பினர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியிருக்கிறது. கூட்டணிக் காட்சிகளுக்கான முன்னோட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், ராமதாஸ் தனது காட்சியை மட்டும் இன்னும் மாற்றிக்கொள்ளவே இல்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.
ஒரு தலைவன் என்பவன், தான் கொண்ட கொள்கை கோட்டிலிருந்து விலகாமல் பயணிக்க முடியாதுதான். ஆனால், இவ்வாறு தொடர்ந்து இருந்தால், கட்சித் தொண்டர்கள் மன ரீதியாகச் சோர்ந்துபோவார்கள் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இருப்பினும், ராமதாஸ் இந்த தேர்தலில் தனது காட்சியை எவ்வாறு ஓட்டப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலரிடத்தில் எழுந்திருக்கிறது.
தற்போதுவரை, அதிமுகவுடன் கூட்டணியில் தொடர்கிறது பாமக. அதேசமயம், அறிவாலயத்திற்கு வருவதற்கு தைலாபுரத்திலிருந்து துரைமுருகனுக்கு தூது சென்றிருப்பதாகத் தகவல் கசிகிறது. இப்போது அவர் முகாம் மாறினால் தொண்டர்கள் மத்தியில் அது பழக்கப்பட்ட செய்தியாகவே இருக்கும்.
ஆனால், கட்சிக்குப் பின்னடைவு என்ற செய்தி புதிதாக இருக்குமென்கிறார்கள் தொண்டர்களில் ஒருதரப்பினர். எது எப்படியோ காட்சிகளை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தால், கோட்டைக்குள் நுழையும் காட்சியோ இல்லை தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத கட்சியாக வளரும் காட்சியோ கால ஓட்டத்தில் மறைந்துவிடும் என்பதே உண்மை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.