சென்னை அருகே உள்ள திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 12ஆவது வார்டில் உள்ளது பல்லவன் நகர். இங்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு 320 வீட்டுமனைகள் போடப்பட்டு பல்லவன் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பகுதியில் பூங்காவிற்காக வழங்கப்பட்ட நிலத்தையொட்டியுள்ள எம்.ஜி.ஆர். நகர், பாலாஜி நகர், சிவசங்கர் நகர், அம்மன் நகர், திருமலை நகர் ஆகிய இடங்களில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர்.
இப்பகுதி மக்களின் சாலை வசதிக்காக பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டு, அதன் பின்பு சிமெண்ட் சாலையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திருவேற்காடு நகராட்சி 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காலி நிலத்தில் பூங்கா அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. மேலும் அங்கு சாலை அமைத்திருக்கும் பகுதியில் சுவர் அமைக்கும் பணியை தொடங்கினர்.
அவ்வாறு சுவர் எழுப்பப்பட்டால் சாலையை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அங்கிருந்த நகராட்சி ஆணையரிடம் சாலையை விட்டுவிட்டு சுவர் அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு ஆணையர் சாலை கேட்டு வந்தால் வீடே இருக்காது என்றும், சாலை கேட்டு வருபவர்கள் தங்கள் பட்டாவை கொண்டு வாருங்கள்; இல்லை என்றால் வீடுகளை இடித்துத் தள்ளிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த காவல் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்தச் சாலையை கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் இந்தச் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். தாங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் தங்களிடம், 'பட்டா கொண்டு வா! இல்லை என்றால் வீடுகளை இடித்துத் தள்ளுவேன்' ஆணையர் மிரட்டுவதாக புகார் அவர்கள் தெரிவித்தனர்.