சென்னை: செங்கோல் குறித்து சில நபர்கள் பொய்யான செய்தியை பரப்பி வருவது வருத்தம் அளிக்கிறது என திருவாவடுதுறை ஆதினம் அம்பலவான தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் வேதனை தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படவுள்ள செங்கோல் குறித்து திருவாவடுதுறை ஆதினம் அம்பலவான தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் சென்னை அரும்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இந்த செங்கோல் திருவாவடுதுறை ஆதீனத்தின் மூலமாக 1947 ஆம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு வழங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகு நேருஜி, ராஜாஜி போன்ற மூத்த தலைவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு, 18 சைவ ஆதீனங்களில் திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு ராஜாஜி 'இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதை குறிக்கும் வகையில்,
இந்த சுதந்திரத்தை எப்படி நாம் அடையாளப்படுத்துவது’ என்று கேள்விப்பட்டு ராஜாஜி போன்ற தலைவர்கள் திருவாவடுதுறைக்கு வந்து இருபதாவது குரு மகா சன்னிதானம் அம்பலவான தேசிகருடைய காலத்தில் தங்க செங்கோல் சென்னையில் செய்யப்பட்டது. உம்முடி பங்காரு நகைக்கடையில் இந்த செங்கோல் செய்யப்பட்டது. அந்த செங்கோல் திருவாவடுதுறை ஆதீனம் மூலம் வழங்கப்பட்டது. மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் தம்பிரான் சாமிகள் இந்த செங்கோலை கொடுத்து, அந்த செங்கோலை மீண்டும் மவுண்ட் பேட்டன் பிரபு தம்பிரான் சாம்பியிடம் ஒப்படைத்தார்.
இந்த ஆட்சி பொறுப்பை நேருஜி அவர்களிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல ஊர்வலமாக செங்கோலை எடுத்து வந்து அந்த செங்கோலை பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் மூலமாக வழங்கப்பட்டது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. இன்று 75 ஆண்டுகளாக அலகாபாத் அருங்காட்சியகத்தில் ஒரு கண்ணாடி பெட்டியில் இருந்த செங்கோலை இன்று பாரத பிரதமர் மோடி வாங்கி அந்த செங்கோலை சபாநாயகர் பின் இருக்கையில் வைக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்களுக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்திருந்தது. நாளை நாங்கள் டெல்லி செல்ல உள்ளோம். டெல்லிக்கு சென்று அந்த செங்கோலை பிரதமரிடம் வழங்கி பாராளுமன்றத்தில் வைக்க உள்ளளோம். அதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு பூஜை, தேவாரம் பாடல் பாடுவது குறித்து நேரில் சென்று பார்த்தால் தான் தெரியும். சில நபர்கள் பொய்யான செய்தியை பரப்பி வருவது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு பெருமை கிடைத்துள்ளது. நீதிநெறி தவறாமல் நடப்பதற்காக தான் செங்கோல் கொடுக்கப்படுகிறது. ஒரு அரசன் நீதிநெறி தவறாமல் வாழ வேண்டும் என்பதற்காக தான் கொடுக்கப்படுகிறது.
சைவ மதம் மட்டுமல்ல இந்திய நாட்டில் இருக்கின்ற அனைவருக்கும் தான் உண்டு, அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்திய நாட்டில் உள்ளனர். சைவ மதம் மட்டும் இங்கே இல்லை. அந்த காலத்தில் சோழர்கள் ஆட்சி செய்த விதமாக செங்கோலை அடையாளப்படுத்தி கொடுக்கப்பட்டது. நேரு கொடுத்த செங்கோலை மீண்டும் இந்த உலகத்திற்கு தெரியப்படுத்த உள்ளோம். மூடி மறைக்கப்பட்டு இருந்தது, மீண்டும் வெளி உலகத்திற்கு கொண்டு வருகிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்பே செங்கோல் முடி மறைக்கப்பட்டது குறித்து அரசாங்கத்திற்கு நாங்கள் தகவல் அனுப்பி இருந்தோம்.
இரண்டு மாதம் முன்னே புதிய செங்கோல் வைப்பது தொடர்பாக ஆதீனமிடம் சொல்லி இருந்தோம். செங்கோலை சபாநாயகர் பின்னிறுக்கையில் நாடாளுமன்றத்தில் வைக்கப் போகிறார்கள், இது அனைவருக்கும் தெரியும் விதமாக இருக்கும். நீதி தவறாமல் ஆட்சி நடத்துவது செங்கோல் என்பது தர்மச்சின்னம். தர்மம் அழியாமல் இருப்பதற்கு தான் செங்கோல் கொடுக்கப்படுகிறது. நந்தி ஒரு தர்ம தேவதையை என்று கூறியவர் தர்மம் எப்படி அழிந்து விடுமோ அப்போது உலகம் அழிந்து விடும். தர்மம் எப்போதும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக இந்த நந்தி சின்னத்தை வைத்துள்ளோம்” என கூறினார்.
இதையும் படிங்க: வாக்கிங் ஸ்டிக்காக மாறியிருந்த செங்கோல் - உம்மிடி குடும்பத்தினர் கூறிய கதை..