மக்களவைத் தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க திருச்சி செல்லும் திருநாவுக்கரசர் எம்.பி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டிற்கு நலன் சேர்க்கும் வகையில் அமைந்தால் நன்றாக இருக்கும். வேலையில்லா திண்டாட்டங்களை ஒழிக்கவும் புதிதாக தொழில்களை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பயணம் அமையவேண்டும். இதுவரை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பயணமும் அவ்வாறு அமையாமல் இருக்கவேண்டும்.
பொருளாதார நெருக்கடியை போக்க ரிசர்வ் வங்கியில் உள்ள பணத்தை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது பயனளிக்காதது என்ற ராகுல்காந்தியின் கருத்து நிதர்சனமான உண்மை. பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதேபோல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட் சரியாக தாக்கல் செய்யப்படாத காரணத்தாலேயே அவர் தற்போது மினி பட்ஜெட் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்” என்றார்.