சென்னை: மே17 இயக்க ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி யூ-ட்யூபர் மாரிதாஸ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், யூ-ட்யூபர் மாரிதாஸ் தொடர்ந்து உரிய ஆதாரங்கள் இல்லாமல் பொய்யான தகவலைத் தனது யூ-ட்யூப் சேனலில் பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
குறிப்பாகத் திராவிடக் கட்சிகள் மற்றும் மே 17 இயக்கத்தினர் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகவும், அவர்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்து வருவதாகப் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தால் உளவுத்துறையை வைத்து பாஜக நிரூபிக்க வேண்டியதை விடுத்து, தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் மற்றும் தங்கள் இயக்கத்தினர் மீது நற்பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும், கோட்சேக்களுக்கு கருத்துச் சுதந்திரம் தேவையில்லை; காந்தியைப் பின்பற்றுபவர்களுக்குத் தான் கருத்துச் சுதந்திரம் தேவை.
அதிமுக பாஜக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டதால் கடந்த முறை மாரிதாஸ் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், இந்த முறை திமுக அரசு உடனடியாக மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.