விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ராதிகாவும், அவரது உறவினர் மகனும் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் வேதனை அளிக்கிறது என்றார். மேலும் சமூக வலைதளங்கள் மூலம் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது என்று கூறிய அவர், மத்திய மாநில அரசுகள் இந்திய அளவில் ஆபாச வலைதளங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தொடர்புபடுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் கருத்துக்கள் ஆதாரமற்றவை என்றார். பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையை உரிய காலத்தில் கூட்ட வேண்டுமென்றும் அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.
மேலும் ராஜராஜசோழன் மட்டுமன்றி தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து மன்னர்களும் சனாதன சக்திகளுக்கும் சமஸ்கிருதம் வளர்வதற்கும் துணை போய் உள்ளார்கள் என குற்றம்சாட்டிய அவர், தமிழ்நாட்டில் கலாச்சாரம் மெள்ள மெள்ள சரிந்து போக மூவேந்தர்கள்தான் காரணம் என்றார். பின்னர் பல்லவர்கள்தான் தமிழை கோவிலில் இருந்து வெளியில் அகற்ற காரணமானவர்கள் என்றும் சனாதன சக்தி தற்போது மேலோங்கி நிற்பதற்கு நம்மை ஆண்ட மன்னர்கள்தான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.