சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் போராட்டம் நடத்திவரும் மருத்துவர்களை விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, "அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இவர்களது போராட்டம் போலியானது இல்லை. இதில் எந்தவித அரசியலும் இல்லை என்பதை உணர்ந்கு மருத்துவர்களை அழைத்துப் பேசி தீர்வுகாண வேண்டும்" எனக் கூறினார்.
இவரைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், "அரசு மருத்துவர்களை அச்சுறுத்துவது ஏற்க முடியாத ஒன்று. எனவே அரசு அந்த வேலையைச் செய்யாமல் மருத்துவர்களின் நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அங்கீகரிக்கப்படாத சங்கம் என்று இவர்களை ஒதுக்குவது ஏற்புடையதாக இருக்காது. மருத்துவர் சங்கத்தினரை அழைத்துப் பேசி இந்தப் பிரச்னைக்கு சுமுக தீர்வு எட்டப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவாக சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் நேரில் வந்து தங்களின் ஆதரவினை தெரிவித்தனர். அரசுத் தரப்பில் காலக்கெடு நிர்ணயித்தாலும் அரசு மருத்துவர்களின் போராட்டம் மேலும் வலுப்பெற்றுவருகிறது.