சென்னை: சென்னை வடபழனி பிரசாத் லேபில் ‘A படம்’ என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், இயக்குநரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேசியபோது, “இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது என் மனதிற்கு பல குழப்பங்கள் இருந்தது; காரணம் படத்தின் பெயர். இப்போது ஒரு கருத்தைச் சொல்ல நினைத்தால் கூட அதை இது போன்று விளம்பரப்படுத்தினால் மட்டுமே பார்க்கிறார்கள்.
படத்தில் அம்பேத்கர் வேடமணிந்து சிறிய சஞ்சலம் கூட இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். கூட இருப்பவர்களே காந்தியை ஒருமையில் பேசுகின்றனர். பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்று சொல்கிறார்கள். நான் ஒரு படம் பண்ணியிருக்கிறேன்."Are you Ok Baby" என்ற விஜய் சேதுபதியின் வசனத்தை வைத்து, அந்தப் படத்திற்கு பெயர் வைத்து எடுத்துள்ளேன். விரைவில் அதைப்பற்றிய அடுத்தகட்ட அறிவிப்பு வரும்.
ப்ளூ சட்டை மாறன் நடித்த ‘ஆண்டி இந்தியன்’ திரைப்படம் மிகவும் நன்றாக இருந்தது. அவருக்கும் இதே போன்று சென்சார் ஆகாமலே இருந்தது. அவரும் எங்கெங்கோ சென்று அதை வாங்கினார். கண்டிப்பாக உங்களுக்கு சென்சார் கிடைக்கும்” என்றார்.
தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “இந்தப் படத்தின் முன்னோட்ட காட்சியை நாம் அனைவரும் பார்த்தோம். பல இடங்களில் பல திரைப்படங்களில் காந்தி படங்கள் இருப்பது போல், அம்பேத்கரின் படங்களும் இருக்கும். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை காட்டுவதற்காக, அம்பேத்கரின் படங்கள் அந்தந்த வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும். அவர் ஒரு சமுதாய பிரிவைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமா அவர் தலைவர் என்று கேட்டால் அப்படியில்லை.
லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்னார், ஒரு நபரை பற்றி விமர்சனப்படுத்தாமல், ஒரு கருத்தியலை பற்றி விவாதிக்கும்போது அதனால் மோதல்கள் வராது என்று. ஆனால், சமீப காலமாகவே கருத்தியல் மோதல்கள் தான் அதிகம். வரலாறு பதிவான காலத்திலிருந்து கருத்தியல் இடையே நடக்கும் யுத்தம் தான். மனிதநேயத்தை போற்றுவோம், அநீதிக்கு குரல் கொடுப்போம், அமைதி வேண்டும் என்று சொல்லுவது, அதுதான் இடது சாரி அரசியல். இடதுசாரி அரசியலின் நோக்கமே அமைதி காண்பது தான்.
பிஜேபி ஒரு பகை கட்சி கிடையாது, சாதி பகை கிடையாது, ஒரு தனி மனித பகை கிடையாது. ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இது மூன்றும் தான் மனித குலத்தின் பகை. இந்த மூன்றும் தான் வெவ்வேறு வடிவங்களில் பகைமைகளாக சுற்றி வருகிறது. வலுவுள்ளவர்கள் ஆதிக்கம் செய்வார்கள், வல்லவன் வகுத்தது நீதி என்று சொல்வது தவறு என்று உணரும் காலம் மனிதம் என்று உணரும் போது தான்.
என்னை பார்த்ததும் அண்ணா என்று கூப்பிடத் தோன்றுகிறது என்று சொன்னார்கள், அதுதான் அம்பேத்கரின் எண்ணம். இந்த A படம் என்பது ஒரு உரையாடலை துவங்கி வைக்கிறது. அம்பேத்கரின் பெயர் அவர் ஆசிரியர் பெயர் என்று திரித்து சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படி ஒரு ஆசிரியர் என்று யாருமே இல்லை. அம்பாவதே என்பது மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய மாவட்டம். அப்படி அம்பாவதேக்கர் என்று அழைக்கும்போது, அது அம்பேத்கர் என்று ஆகிவிட்டது என்று ஆதாரங்களுடன் ஒரு கருத்து உள்ளது. அம்பேத்கர், காந்தி இடையே பல முரண்பாடுகள் இருப்பினும், மதச்சார்பின்மை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் ஒன்றிணைந்தார்கள்.
இந்த இடத்தில் தான் நாம் பாஜகவுடன் முரண்படுகிறோம். மதம் சார்ந்த அரசாக அறிவிக்க வேண்டும்
என்று, இந்துக்கள் அதிகம் இருப்பதால் இந்து அரசாக அறிவிக்க வேண்டும் என்பதே முரண்பாடான கருத்து. ஜனநாயக சக்தியே இந்தியாவை ஆள வேண்டும், தமிழன் அல்லது இந்து என்பதற்காகவோ இந்தியாவை ஆள விடக்கூடாது. ஒரு சாதி ரீதியான ஒருவர் ஆள முயன்றால் அது தற்காலிகமான ஒன்றே” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அம்பேத்கர் பிறந்த நாளில் அரசியல் என்ட்ரிக்கு அடித்தளம் அமைக்கிறாரா நடிகர் விஜய்?