சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிறுவன் சுஜித்தை காப்பாற்ற இயலவில்லை என்பது வருத்தத்தையும் தலைகுனிவையும் ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தமிழக அரசு செய்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அமைச்சர்கள், காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை சுஜித் உயிரைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்தனர். ஆனாலும் சிறுவனைக் காப்பாற்ற முடியாதது வருத்தம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சுஜித் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரிக்கை:
‘மத்திய - மாநில அரசுகள் தண்ணீர், மீத்தேன், கணிம வளங்களை எடுக்கிறோம் என்ற பெயரில் சுற்றுச்சூழல் சிதைவதற்கு காரணமாக இருக்கக்கூடாது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் முற்றிலும் கைவிடப்பட வேண்டும். மணல் அள்ளுவது நிறுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளில் மத்திய - மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்’ என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.