விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தண்டமிழ்ச் சான்றோர்களும், முக்கிய பிரமுகர்களும் அவருக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் கலைஞர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று அவர் இல்லாததால் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் இடத்தில் ஸ்டாலின் இருந்து திமுகவை வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார். ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து பரப்புரை மேற்கொள்ள உள்ளோம். மேலும் பனை விதை ஊன்றும் திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு நாளும் மரங்கள் நாளாக கொண்டாடப்பட்டு பனை விதைகள் விதைக்க உள்ளோம்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகளில் மாணவர்கள் கையில் சாதி அடிப்படையில் கையிறுகள், குறியீடுகள் இருக்கக்கூடாது என தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கை வரவேற்கத்தக்கது. ஒரு போதும் பள்ளி மாணவ செல்வங்களின் மனதில் சாதியை பூச கூடாது. எச்.ராஜா போன்றவர்கள் இதை இந்து மதத்திற்கு எதிரான செயல்பாடு என தவறாக திசை திருப்பி வருகிறார்கள். சாதி அடிப்படையில் வண்ணக் கயிறுகள் கூடாது என்னும் அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது' என தெரிவித்தார்.