சென்னை அடுத்த திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்த வியாபாரிகளுக்கான 200 கடைகள் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், இன்று காலை மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஆகியோர் ஆய்வு செய்து தங்களது கோரிக்கைகளை தமிழக அரசுக்கு அறிவித்திருந்தனர்.
இதையடுத்து இன்று மாலை அமைச்சர் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் தற்காலிக கோயம்பேடு சந்தை அமையும் இடத்தில் நடைபெறும் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கடையின் நீளம், அகலம், மின்சாரம், தண்ணீர், கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
சரக்கு லாரிகள் வந்துபோக போதிய இட வசதி ஏற்படுத்தவும், வியாபாரிகளின் முக்கிய கோரிக்கையான வங்கி மற்றும் ஏடிஎம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருமழிசை தற்காலிக கோயம்பேடு சந்தை பணி விரைவாக நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் தேதி இரவு அல்லது 10ஆம் தேதி காலை முதல் சந்தை இயங்கும். மொத்த வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” என்றார்.