சென்னை:சமீப காலமாக அரசுத் துறை, வங்கித் துறை மற்றும் ரயில்வே துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து காவல்துறையினருக்குப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனையடுத்து, அப்புகாரின் அடிப்படையில் பொதுமக்களிடம் பணத்தைப் பறிக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனடிப்படையில் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு தலைமையில் “ஆப்ரேஷன் ஜாப் ஸ்கேம்” என்ற பெயரில், மோசடி கும்பலைக் கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
முப்பது பேர் கைது
இதில் தமிழ்நாடு முழுவதும் வேலை வாங்கி தருவதாகப் பொதுமக்களிடம் மோசடி செய்ததாக 58 வழக்குகள் பதிவு செய்து, சென்னையைச் சேர்ந்த 12 பேர் உள்பட 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குறிப்பாக இம்மோசடியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ் மணியனின் உதவியாளர் சேஷாஸ்திரியும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி ராணி எலிசபெத், தலைமைச் செயலக ஊழியர் கண்ணன் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நவம்பர் மூன்றாம் தேதி அன்று கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
மேலும், வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்யும் நபர்களின் விவரங்களைப் பற்றி அறியத் தலைமையிட கட்டுப்பாட்டு அறை எண்கள் - 044 28447701 & 28447703, மாநில கட்டுப்பாட்டு அறை எண் 044 23452359 மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவு எண் 044 23452380 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குடித்துவிட்டு அடுத்தவரின் வீட்டில் புகுந்த அதிமுக முன்னாள் எம்.பி.,க்கு அடி, உதை!