சென்னை: மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சிகள் எடுத்துவருகிறது. இதனிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் உடனடியாக மீட்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த வகையில் முதல்கட்டமாக 13 பேர் மீட்கப்பட்டனர்.
தாய்லாந்திலிருந்து டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அதன்பின் 13 பேரும் இன்று காலை (அக் 5) சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை வெளிநாட்டு தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மியான்மருக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 50 தமிழர்களில் முதல்கட்டமாக 13 பேர் மீட்கப்பட்டு சென்னை வந்தடைந்தனர். மீதம் உள்ளவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
மியான்மரில் இருந்து தமிழ்நாடு வந்தடைந்த கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “நாங்கள் துபாயில் வேலைக்கு விண்ணப்பித்தோம். அப்போது தாய்லாந்தில் வேலை இருப்பதாக துபாய் ஏஜென்ட் எங்களிடம் கூறினார். அதை நம்பி அங்கு சென்றபோது எங்களுக்கு வேலை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும் அங்கிருந்தவர்கள் எங்களை ஒரு இடத்தில் வைத்திருந்தனர். சில நாள்களுக்கு பின்பு நாங்கள் சட்டவிரோதமாக மியான்மரில் இருக்கிறோம் என்பது தெரிந்தது. உடல் மற்றும் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டோம்” என்றார்.
இதையும் படிங்க: மியான்மரில் சிக்கித் தவித்த 13 பேர் இந்தியா வருகை - அமைச்சர் செஞ்சி மஸ்தான்