சென்னை: படை வீரர்கள், வீரமங்கையர்கள் மற்றும் வீர தீர பதக்கங்கள் பெற்ற முப்படை ராணுவ வீரர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடும், ஆளுநரின் எண்ணித் துணிக நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ரவி, முன்னாள் படைவீரர்கள் 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், விருதுகளையும் வழங்கினார்.
இந்த எண்ணித் துணிக நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையினருடனான மோதலில் பலியான தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹவில்தாரின் மனைவி வானதி தேவி பேசும்போது, "மாநில அரசு வழங்கும் கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு குறித்து தனது கவலையை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தற்போதைய நடைமுறைப்படி பணியில் உள்ள படை வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழ்நாடு அரசு குரூப் சி மற்றும் குரூப் டி ஆகிய பிரிவுகளில் உள்ள பதவிகளில் வேலைவாய்ப்பை வழங்குகிறது.
இந்த பிரிவுகளில் வழங்கப்படும் வேலை, தமிழ்நாடு அரசு பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் அலுவலர், ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கும் வழங்கப்படுகிறது. அந்த அரசு ஊழியர் பணி நேரத்தில் உயிரிழந்தாலும், பணிக்காலத்தில் உயிரிழந்தாலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு இந்த இரண்டு குரூப்களில் ஒரு பிரிவில் வேலைவாய்ப்பு தரப்படுகிறது.
ஆனால், எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எல்லை காவல் பணியில் இருக்கும்போது எதிரிகளுடன் தீரத்துடன் மோதி உயிரை இழக்கும் ராணுவ வீரர் இறந்து விட்டால் அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கும் அதே குரூப் சி, குரூப் டி பிரிவி்ல் தான் வேலை தரப்படுகிறது. என்னுடைய கணவர் போன்றோரின் மரணங்கள் திட்டமிட்டோ யதேச்சையாகவோ நடப்பதில்லை, திடீரென நடக்கிறது.
படை வீரர்களான அவர்களின் உயிர்த்தியாகம் அசாதாரணமானது. அந்த வீர மரணத்துக்கு அரசு தற்போது சில ஏற்பாடுகளின் படி வேலை வாய்ப்பு நிதி ஆதரவை வழங்கினாலும் அது நியாயமானதாக உள்ளதா என கேட்க விரும்புகிறேன். என்னுடைய விஷயத்தில், அந்த சம்பவத்தில் எனது கணவர் உயிரிழப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் நான் அவருடன் பேசினேன். ஆனால், திடீரென்று அவர் கொல்லப்பட்டு விட்டதாக செய்தி வந்தது. 20 பேர் உயிரிழந்த கல்வான் சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரரை இழந்தவள் நான் மட்டுமே.
நமது பக்கத்து மாநிலத்திலும் அதே சம்பவத்தில் ஒரு கர்னல் அதிகாரி உயிர்த்தியாகம் செய்தார். அந்த வீரரின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அம்மாநில அரசு துணை ஆட்சியர் பணியும், ரூ.5 கோடி இழப்பீடு, வீட்டு மனை போன்றவற்றை வழங்கி, வீர மரணம் அடைந்த பிறகும் அந்த வீரரின் குடும்பம் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதிப்படுத்தியது.
இங்கே தமிழ்நாட்டில் எனது கணவர் உயிரிழந்த பிறகு தமிழ்நாடு அரசு சார்பில் எனக்கு ரூ.20 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் இது பற்றி அறிந்த ஆளுநர், தமது ஆளுநர் நிதியில் இருந்து மேற்கொண்டு இருபது லட்ச ரூபாய் வழங்கி உதவினார். என்னைப் போன்றோரின் வாழ்வில் மாற்றம் ஏற்படுவதற்கான தொடக்கம் இந்த ஆளுநர் மாளிகையில் இருந்துதான் தொடங்கியது.
இந்த நேரத்தில் தமிழ்நாடு ஆளுநரிடம் மற்றொரு கோரிக்கையை வைக்க விரும்புகறேன். என்னில் இருந்து நீங்கள் தொடங்கிய அந்த மாற்றத்தை இனி வரும் நாட்களில் என்னைப் போன்ற கணவனை இழந்த விதவைகள், குழந்தைகளை இழந்த தாய்மார்கள், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவிடும் வகையில் தயவு செய்து தொடருங்கள்" என்று வானதி தேவி கூறினார்.