சென்னை: தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் சேலையூர் சுற்றுவட்டார தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறை கூட்டமைப்பு சார்பில் இமானுவேல் சேகரனாரின் 65ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”திராவிட மாடல் என்பது ஒரு வேடிக்கை. திராவிடம், திராவிடம், திராவிடம் என பேசுவதற்கு காரணமே நாங்கள் தான். பிரபாகரனின் பிள்ளைகளாகிய நாங்கள் வந்தபிறகே திராவிடத்தை அதிகமாகப் பேசுகின்றனர். திராவிட மாடல் என்ற புத்தகம் வந்தால் நானும் வாங்கி படிக்க ஆர்வமாக உள்ளேன்” என்றார்.
பின்பு, ராகுல் காந்தியின் நடைபயணப்பரப்புரை குறித்த கேள்விக்கு, “ராகுல் காந்தி அரசியல் செய்கின்றாரா..?” என சீமான் கேள்வி எழுப்பினார். மேலும், “ராகுல் காந்தியால் சொந்த தொகுதியிலேயே நின்று வெல்ல முடியவில்லை. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இயங்கவில்லை. 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டு கொண்டு வரமுடியாத மாற்றத்தை, 5 மாதங்களில் ராகுல் காந்தி நடைபயணம் செய்து மாற்றிவிடுவாரா என்ன?” என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜகவினர் ஆளுநரை சந்தித்துள்ளனரே என்ற கேள்விக்கு, ”திமுக , பாஜக இருவருக்கும் வேலை இல்லை. அடிக்கடி இது போன்று வேடிக்கை காட்டுவார்கள். நமக்கு நிறைய வேலை இருக்கு, அவர்களைப் பற்றி பேசவேண்டாம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அணைகளைக்கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் துரைமுருகன்