கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுகாதாரத் துறை அலுவலர்கள், ரயில்வே துறை அலுவலர்கள் ஆகியோருடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், ரயில்வே துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு, ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “நாள்தோறும் வெளிமாநிலங்களிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 40 ரயில்கள் வருகின்ன. அவற்றில் சுமார் 40 ஆயிரம் பயணிகள் வெளிமாநிலங்களில் இருந்து வருகிறார்கள். இதன் மூலம் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாளை முதல் வெளிமாநிலங்களிலிருந்து வரும் ரயில்களில் தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
தற்போது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் ரத்து செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக ரயில்வே அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள். அடுத்தக்கட்டமாக வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான ரயில்கள் தவிர, சிறப்பு ரயில்களை ரத்து செய்யும்படி தென்னக ரயில்வேயிடம் வலியுறுத்தியுள்ளோம். இதனால் வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படாது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நாளை சோதனை அடிப்படையில் கரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்கப்படும். ஓரிரு நாட்களில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்ய ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்” என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் மூதாட்டிக்கு கரோனா அறிகுறி - சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்