சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வரும் ஏரிகளில் மொத்த கொள்ளளவான 13,222 மில்லியன் கன அடியில் 8,566 மில்லியன் கன அடி குடிநீர் இருப்பில் உள்ளது. இதன்மூலம் அடுத்த ஒரு ஆண்டிற்குச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான வீராணம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை, புழல், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் சோழவரம் ஆகியவற்றின் மொத்த கொள்ளளவு 13,222 மில்லியன் கன அடி ஆகும்.
தற்போது, 8,566 மில்லியன் கன அடி குடிநீர் இருப்பில் உள்ளது. இது 64.79 விழுக்காடாகும். இதன் மூலம் அடுத்த ஒரு ஆண்டிற்கு சீரான குடிநீர் விநியோகம் தொடர்ந்து செய்யப்படும்.
பூண்டி ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நீர் வளத்துறையால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. பொதுப்பணித்துறையின் நீரியல் மற்றும் நீர் நிலையியல் மையத்திற்கு நீர் வழங்குவதற்கான இரண்டு கிணறு மதகு (Sluice wells) பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகளுக்கான மறு சீரமைப்புக் கட்டுமானம் தற்பொழுது 50 விழுக்காடு பூர்த்தி அடைந்துள்ளது. தற்சமயம், கிருஷ்ணா நதிநீர் திட்டத்திலிருந்து பூண்டி ஏரிக்கு நீர் வரத்துப் பணிகள் நடைபெறுவதால் தற்காலிகமாக நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. எதிர் வரும் வடகிழக்குப்பருவமழையின் மூலம் அனைத்து ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளது.
மேலும் ஜனவரி மாதம் முதல் கிருஷ்ணா நதிநீர் பங்களிப்புத் திட்டம் வாயிலாக 4 டி.எம்.சி தண்ணீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு கிடைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னரே நீர் வளத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு அடுத்த ஒருஆண்டு காலத்திற்கு இருப்பில் உள்ள குடிநீரைக்கொண்டு தொடர்ந்து எந்தவித தங்குதடையின்றி சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க இயலும்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பெரம்பலூர் அருகேயுள்ள எம்ஆர்எஃப் தனியார் நிறுவனத்தை மூடக்கோரி மனு