சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை சிறுமிகள் பாதுகாப்பு நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதை விசிக வரவேற்கிறது. ஆனால், இங்கு சிறுமிகள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர்.
அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. சிஏஏ மற்றும் என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இரண்டு லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டு சிஏஏ மற்றும் என்பிஆர் ஆகிவற்றைக் கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி பேரணி நடத்தினோம்.
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அண்டை மாநில முதலமைச்சர்கள் நாராயணசாமி, பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோரை போன்று தமிழ்நாடு முதலமைச்சரும் சிஏஏ, மற்றும் என்பிஆர் ஆகியவற்றை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: திமுகவில் பல அவமானங்களைச் சந்தித்தேன் - கண்கலங்கிய கே.என். நேரு