இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கந்தசஷ்டி கவசம் பாடலை கொச்சைப்படுத்தியும், தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை இழிவுபடுத்தியும், தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியும் ஒரு காணொலி பதிவை வெளியிட்ட கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் இணையத் தொலைக்காட்சியின் நிர்வாகிகள் செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்து வகையான குற்றங்களுக்கு எதிராகவும் நீட்டிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைச் செய்த குற்றவாளிகள், இனியும் ஒருமுறை அத்தகைய இழி செயலை செய்வது குறித்து நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு தண்டனைகள், சட்டத்திற்குட்பட்டு, கடுமையாக இருக்க வேண்டும்.
அந்த தண்டனைகள் குறித்த செய்திகளே அத்தகைய குற்றங்களை செய்யத் துணியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். குற்றவாளிகளாக இருந்தாலும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களிடம் மனிதாபிமானம் காட்டத் தேவையில்லை.
பாலியல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் நிலையும், பெண்களும் குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையும் நிலவுவதை மாற்ற வேண்டும். பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது. அதன்மூலம் தமிழ்நாட்டை பெண்களும் குழந்தைகளும் ஒரு துளிகூட அச்சமின்றி சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் நடமாடும் பூமியாக தமிழ்நாடு மாற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.