கரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார். அப்போது அவர், ”கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டிலுள்ள மருத்துவர்களிடம் பேசி வருகிறார். இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவர் அருளானந்தத்திடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் பேசினார். தேவையான உதவிகளைச் செய்வதாக பிரதமர் உறுதியளித்திருக்கிறார்.
மத்திய சுகாதாரத் துறைச் செயலாலர், தமிழ்நாடு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கரோனா வைரஸ் நோயாளிகளை இடமாற்றம் செய்ய நாளை 100 புதிய ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும். நீண்ட நாள் பாதிப்பு நோய் பாதிப்பு உடையவர்கள், கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகள், அதிக ரத்த அழுத்தம் கொண்டவர்கள், எச்.ஐ.வி. நோயாளிகள், டிபி நோயாளிகளுக்கு தேவையான மருந்தை வீட்டுக்கே வந்து கொடுக்க தயாராக உள்ளோம்.
மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. 1 கோடி முகக்கவசங்கள் ஆர்டர் செய்துள்ளோம். தேவையான அளவு கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தாமாக முன் வந்து வீட்டில் தனிமையாக இருக்க வேண்டும். பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வருவதாக எங்களுக்கு தகவல் வருகிறது.
எனக்கு பாதிப்பு இல்லை என்று கூறி வெளியே வரக்கூடாது. வெளிநாடுகளிலிருந்து வந்து தகவல் தெரிவிக்காத நபர்களாலேயே தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. கணவனிடமிருந்து மனைவிக்கு, மகனிடமிருந்து தாய்க்கு என பரவியுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கட்டாயமாக அதனைப் பின்பற்ற வேண்டும்.
மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தாய்லாந்து கரோனா நோயாளிடன் தொடர்பு ஏற்பட்டதாலேயே மதுரையில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கும் அதிதீவிர நோயாளி. இது சமூக பரவல் இல்லை” என்று கூறினார்.