சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் காவல் நிலையம் அருகே சி.டி.எச். சாலையில் உள்ளது 'நேச்சுரலஸ்' அழகு நிலையம். இதனை அங்கு பணியாற்றும் ஊழியர்கள், நேற்று வழக்கம் போல் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் இன்று காலை அழகு நிலையத்தை திறக்க வந்த அந்த ஊழியர்கள், பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் உள்ளே போய் பார்த்த போது, அங்கு கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு பணம் களவு போயிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அழுகு நிலையத்திற்கு அருகில் இருந்த பட்டாபிராம் காவல்நிலையத்தில் ஊழியர்கள் புகார் அளித்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கல்லாப்பெட்டியை உடைத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்துச் செல்வது பதிவாகியிருந்தது. இந்த வீடியோவைக் கொண்டு அந்த மர்ம நபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.