சென்னை, எம்கேபி நகர், அப்துல்கலாம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் செல்வராஜ் (வயது 57). இவர் வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் சொந்தமாக இரும்புக் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 26ஆம் தேதி அன்று தனது மகன் அலெக்சாண்டருக்கு திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள மருமகள் வீட்டிற்கு தன் மனைவி, மகன் அலெக்சாண்டர் இருவரையும் அனுப்பி வைத்துவிட்டு செல்வராஜ் வீட்டில் தனியாகத் தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (நவ.04) காலை செல்வராஜ் தன் வீட்டைப் பூட்டிவிட்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது கடைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து, சுமார் நான்கு மணியளவில் செல்போனில் செல்வராஜை தொடர்புகொண்ட அவரது பக்கத்து வீட்டுக்காரர், செல்வராஜின் வீட்டில் சத்தம் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்து செல்வராஜ் பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகைகள், நான்கு வைரக் கம்மல்கள் திருடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனால் உடனடியாக செல்வராஜ் எம்.கே.பி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத நபர்கள் செல்வராஜின் பக்கத்து வீட்டின் கதவை பூட்டிவிட்டு, கதவின் சாவி துவாரத்தில் எவரும் பார்த்துவிட முடியாதபடி பேப்பர் ஒன்றையும் ஒட்டிவிட்டு, சுமார் 20 நிமிடத்தில் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்துள்ளது.