தாம்பரம் : வேளச்சேரி பிரதான சாலையில் கௌரிவாக்கம் பகுதியில் ப்ளூ ஸ்டோன் என்ற தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இங்கு நேற்று இரவு வழக்கம் போல வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் கடையின் ஊழியர் ஜெகதீஷ் என்பவரின் செல்போனுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது,
அவர் சுமார் ஆறு மணிக்கு மேல் எச்சரிக்கை ஒலி அடித்தது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அங்கு வந்த போலீசார் கடை ஊழியர்கள் உதவியுடன் கடையை திறந்து பார்த்தபோது கடையின் உள்ளே கடையின் சுவர்களில் உள்ள கபோர்டுகளில் டிஸ்ப்ளேக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
சம்பவ இடத்திற்கு பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் ஜோஸ் தங்கையா, சேலையூர் உதவி ஆணையர் முருகேசன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை சேகரிக்கப்பட்டு கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து அதில் பதிவாகியுள்ள கொள்ளையரின் அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில நபர் என்பதை உறுதிபடுத்தினர்.
பின்னர் அப்பகுதி முழுவதும் தனிப்படை போலீசார் சோதனையிட்டு அருகில் சுற்றித் திரிந்த நபரை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர் அருகில் ரோஸ் மில்க் கடையில் வேலை பார்த்து வந்ததும், நகை கடைக்கு எதிரே உள்ள தெருவில் வாடகைக்கு தங்கியிருந்ததும் தெரியவந்தது. அவர பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையில் கொள்ளை போன நகைகளின் விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது. நகைகள் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.