சென்னை: தமிழ்நாட்டில் தமிழ்ப்படங்கள் தவிர்த்து பிறமொழிப் படங்களும் ஆங்கில டப்பிங் படங்களும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகின்றன. இது காலங்காலமாக உள்ள நடைமுறைதான். இந்த ஆங்கிலம் மற்றும் டப்பிங் படங்களுக்கு திரையரங்குகள் உரிமையாளர்கள் வழக்கமாக 55 சதவீதம் மட்டுமே பங்குத் தொகையாக விநியோகஸ்தர்களுக்கு வழங்கி வந்தனர்.
ஆனால், சமீபகாலமாக ஆங்கிலப் படங்கள் மற்றும் பிறமொழி டப்பிங் படங்கள் தமிழ்நாட்டில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி வெற்றிபெற்றும் வருகின்றன. ஆர்ஆர்ஆர், புஷ்பா, கேஜிஎப் போன்ற பிற மாநில மொழிப்படங்களும் அவஞ்சர்ஸ் எண்டு கேம் போன்ற ஆங்கில படங்களும் தமிழ்நாட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றன. இதனால் விநியோகஸ்தர்கள் தரப்பில் பங்குத்தொகை உயர்த்தப்பட்டது.
சமீபத்தில் வெளியான அவதார் படத்திற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் 70 சதவீதத்துக்கு மேல் பங்குத் தொகை கேட்டதால் திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர். அத்தனை சதவீத பங்குத் தொகை தரமுடியாது என்று மறுத்துவிட்டனர். இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு திரையரங்குகளில் அவதார் திரைப்படம் முதல் நாளில் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெளியாகும் ஆங்கிலம் மற்றும் டப்பிங் படங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கட்டுப்பாடு விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அந்தப் படங்களுக்கு 55% மேல் ஷேர் தொகை வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.