தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "கரோனா தொற்றால் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கவில்லை. முழுமையான அளவுக்கு பாடம் நடத்த இயலவில்லை. பள்ளிகள் திறந்து சரிவர பாடம் நடத்தாததால், கல்வி கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டும் பெற்றோர்கள் இன்னும் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு ஒரு காசுகூட பணம் கட்டவில்லை.
மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 80 விழுக்காட்டினர் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை. ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்கள் கிராமங்களில் தினக்கூலி வேலைகளுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர். ஏழை கிராமப்புற மாணவர்கள் படிக்க முடியாமல் இணையதள வசதி இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளிலும் படிக்க முடியாமல் படிப்பை மறக்கத் தொடங்கிவிட்டனர்.
கிராமம் முதல் நகரம் வரை உள்ள அனைவருக்கும் தரமான கல்வியை கிடைக்கச் செய்வதில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு முக்கியமானது. பல மாநிலங்களில் பல நாடுகளில் பள்ளிகள் திறந்து கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடந்துவருகிறது.
அரசின் அனைத்து விதிகளுக்குள்பட்டு சுகாதாரச் சீர்கேடு ஏற்படாமல் தகுந்த இடைவெளியோடு கிருமிநாசினி கொண்டு முகக்கவசத்தோடு முழுச் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளோடு ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது காலை, மாலையோ படிப்படியாகவோ பள்ளிகளைத் திறந்து கற்றலையும் கற்பித்தலையும் உறுதிசெய்திட வேண்டும்.
இன்னும் 50 விழுக்காடு தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்கவில்லை. வாங்க வழியில்லை இந்தக் கொடிய நோய் தொற்று காலத்திலாவது இந்தக் கரோனா ஆண்டுக்காவது அனைத்து தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பாட புத்தகத்தை கொடுத்து படிக்கவைக்க வேண்டும். காலாண்டு தேர்வு நடக்கவில்லை.
அரையாண்டுத் தேர்வு முடித்தாக வேண்டும், அடுத்த மூன்று மாதங்களில் முழு ஆண்டுத் தேர்வு வந்துவிடும். 10 , 11, 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு உண்டா, இல்லையா? என்று தெரியாமல் பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
வெயில் காலமும் மழைக்காலமும் விழா காலமும் முடிந்துவிட்டது. எனவே எதிர்கால மாணவர்களின் பெற்றோர்களின் ஆசிரியர்களின் நலன்கருதி அனைவரையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் உடனே பள்ளிகளைத் திறக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு: அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு