அண்ணா பல்கலைகழகத்தின் முதலாமாண்டு மாணவர்களுக்கு பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு கல்லூரிகளில் தத்துவவியல் கலாச்சாரம் மனிதர்கள் உள்ளிட்ட 12 பாடங்களை விருப்பப்பாடமாக அறிமுகம் செய்ய இந்த ஆண்டு திட்டமிட்டுள்ளோம். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் 22 பாடங்களை விருப்பப் பாடங்களாக அளித்துள்ளது. மாணவர்கள் 22 பாடங்களில் ஐந்து பாடங்களை கட்டாயம் படிக்க வேண்டும்.
அதிலிருந்து 12 பாடங்களை தேர்வு செய்து நாங்கள் விருப்பப் பாடங்களாக இளங்கலை படிப்பில் வைத்துள்ளோம். அவற்றில் ஒரு பாடம் தத்துவவியல் பாடம். மாணவர்கள் விருப்பப்பட்டால் அதனை எடுக்கலாம் இல்லை என்றால் வேறு பாடங்களை எடுத்து கொள்ளலாம். அண்ணா பல்கலைகழகத்தில் பதினெட்டு பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் இன்பர்மேஷன் டெக்னாலஜி படிக்கும் மாணவர்களுக்கு தத்துவவியல் பாடத்தினை எடுப்பதும் வேறு படத்தை எடுப்பதும் அவர்களின் விருப்பம் ஆகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அனைத்து விஷயங்களையும் மனித நெறிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் தத்துவவியல் பாடத்தை வைத்துள்ளோம். இந்தப் பாடத்திட்டம் 2020ஆம் ஆண்டு தான் அமலுக்கு வருகிறது.
விருப்ப பாடங்களில் எந்த மாணவரையும் குறிப்பிட்ட பாடத்தை எடுக்க வேண்டுமென கட்டாயப்படுத்தவில்லை. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் சமஸ்கிருதத்தையும் தனியாக ஒரு பாடமாக அளித்துள்ளது. அதனை நாங்கள் விருப்பப் பாடமாக தேர்வு செய்யவில்லை.
தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தொழில்நுட்பத்துடன், மனித ஆற்றல், சமூகம் சார்ந்த சட்டங்கள் போன்றவற்றையும் கூடுதலாக தெரிந்துகொள்வது பயனுள்ளதாக அமையும். தத்துவவியல் பாடத்தினை மாற்றம் செய்வது குறித்து தேவைப்பட்டால் விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்படும்.
இந்தியாவிலுள்ள அனைத்து ஐஐடியிலும் தத்துவவியல், சமூக அறிவியல், நீதிநெறி இயல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற பாடங்களைக் கற்பதால் மாணவர்களுக்கு கூடுதலாக அறிவு பெற முடியும்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழகம் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதுகுறித்து அறிவிப்பினை விரைவில் அரசு வெளியிட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.