கோவையைச் சேர்ந்த சேகர்-ஆனந்தி தம்பதியினர். சமையற்கலைஞர்களான இவர்கள் சென்னை தில்லைகங்கா நகரில் உள்ள 23ஆவது தெருவில் தங்கி சமையல் வேலை பார்த்துவருகின்றனர்.
நேற்று (டிச. 13) காலை சமையல் வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு இருவரும், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில் ஒரு நபர் அளவு கடந்த மதுபோதையில், அதன் அருகே தூங்கிக்கொண்டிருந்தார்.
அதைப்பார்த்த ஆனந்தி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் வந்து, அந்த நபரைப் பிடித்து வைத்துள்ளனர். இதையடுத்து ஆதம்பக்கம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் விரைந்துவந்த காவல் துறையினர் அந்த நபரை தெளியவைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆலந்தூர், வ.உ.சி. தெருவைச் சேர்ந்த நாகராஜ் (36) என்பது தெரியவந்தது. பின்னர் அவரைக் கைதுசெய்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவிற்கு போராடிய செவிலியர்கள் நிரந்தர பணிக்கு போராடுகின்றனர்