சென்னை திருமங்கலம் 100 அடி சாலை அருகே கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இரவு 11.50 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருப்பதாக, திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், படுகாயமடைந்த நபரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில், விபத்துக்குள்ளான நபர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது ஏறி குதித்து சாலையை கடக்க முயற்சிக்கும் போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியது தெரிய வந்தது. இந்நிலையில் படுகாயமடைந்த நபர் நேற்றிரவு (பிப்.15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து காரின் எண்ணை வைத்து அதன் ஓட்டுநரான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லூயிஸ் ரத்தினகுமார் (44) என்பவர் மீது வழக்குபதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் காரில் அடிப்பட்டு படுகாயமடைந்து, இறந்த நபர் யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவர்கள்: காவல் துறை விசாரணை!