தீபாவளி பண்டிகை காலத்தில் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் ரயில்வே துறையால் ஏராளமான கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அந்தவகையில், தென்னக ரயில்வே சார்பாக 103 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அவற்றில் கரோனா பாதிப்பு காரணமாக வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுக்குப் பதிலாக கரோனா சிறப்பு ரயில்களாக 76 வண்டிகளும், பண்டிகை கால சிறப்பு ரயில்களாக 27 வண்டிகளும் இயக்கப்படுகின்றன.
ஜூன் மாதத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டபோது மக்கள் பயணிப்பது மிகவும் குறைந்த அளவில் இருந்த நிலையில் தற்போது பயணிகள் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்திருப்பதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அக்டோபர் மாதத்தில் இயக்கப்பட்ட கரோனா சிறப்பு ரயில்களில் 74% மக்கள் பயன்பாடு இருந்ததாகவும், இதில் 19.56 லட்சம் பேர் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பண்டிகை சிறப்பு ரயில்களில் 57% பயன்பாடு இருந்ததாகவும், சுமார் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதனை பயன்படுத்தியதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
பண்டிகை சிறப்பு ரயில்கள் டாக்டர் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர், மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, ராமேஸ்வரம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கன்னியாகுமரி ஆகிய முக்கிய வழித்தடங்களை பெங்களூரூ, டெல்லி, ஹைதராபாத், ஹவுரா, புவனேஸ்வர் உள்ளிட்ட பகுதிகளுடன் இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்றி உரிய பாதுகாப்புடன் ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தேர்வு கட்டணம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!