சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது , "காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் வருகிற 10 ம் தேதி நடைபெறவிருக்கிறது. கட்சியில் 15 லட்சத்திற்கும் மேல் வாக்காளர்கள் உள்ளனர்.
கேரளா கர்நாடகா போன்ற மாநிலத்திலிருந்து தேர்தல் நடத்துவதற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர் அவர்கள் தலைமையில் இந்த உட்கட்சித் தேர்தல் நடைபெறும். இதன் மூலம் அனைத்து இடங்களிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த மாநில தலைவர் ஒரு பெண்ணாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சி இடதுசாரிகள் பக்கமும் நிற்காது,வலது சாரிகள் பக்கமும் நிற்காது இயல்பான கொள்கைகள் கொண்டே பயணிக்கிறது. விரைவில் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமையும்.
கூட்டணி கட்சியான தி.மு.க சிறப்பாக செயல்படுகிறது. எனவே அவர்களை பாரட்டுகிறோம். வாரிசு அரசியலில் ஈடுபடக் கூடிய திமுக, காங்கிரஸ் கட்சி ஒன்று காணாமல் போய்விடும் என பாஜக தலைவர் அண்ணாமலை சாபம் விடுகிறார். திமுகவிற்கு சாபம் விடும் அண்ணாமலை ஒரு தேர்தலில் நின்று வெற்றி பெற்று காட்டட்டும்.
இந்தியாவின் பொருளாதாரம் மோடி ஆட்சியில் தான் வீழ்ந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடியின் தவறான பொருளாதார அணுகுமுறையே காரணம். இலங்கையில் பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் சுய சார்பு இல்லாமல் அனைத்துக்கும் பிற நாடுகளை சார்ந்து இருந்ததே காரணம். நம் நாட்டில் அது போன்ற ஒரு நிலை ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் இங்கு நேரு காலத்திலேயே நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் சுய உற்பத்தி பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : ராஜ்யசபா இடங்களை திமுகவிடம் கேட்போம்-சொல்கிறார் கே.எஸ்.அழகிரி