சென்னை: அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே இரட்டை தலைமை விவகாரம் கோலோச்சி உள்ளது. அதைத் தொடர்ந்து, ஏற்பட்ட பிரச்சனைகளால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரண்டு பிரிவாகச் செயல்படத் தொடங்கினர். இதனிடையே கடந்த ஜூலை 11-ம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அந்தப் பொதுக்குழுவிலேயே ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கட்சியின் உரிமை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.
ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு விசாரணை நிலையில் உள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுக்குழு தீர்மானங்கள், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சமர்பிக்கப்பட்ட நிலையில், அந்தத் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான், கடந்த அக்டோபர் 3-ம் தேதி இடைக்கால பொதுச்செயலாளர் எனக் கையெழுத்திட்டு எடப்பாடி பழனிசாமி 2021-22-ம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் இந்த வரவு செலவு கணக்கை, அதிமுகவின் வரவு செலவு கணக்காக இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
மேலும், அதை தனது அதிகாரபூர்வ இணைய பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு சமர்பித்த ஆவணங்களில் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரித்துறை கடிதமும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையமும், வருமானவரித்துறையும் அங்கீகரித்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
பாஜகவை விமர்சிக்க வேண்டாம்:
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர்களுக்கும் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது. இதனால் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் எனவே கூறப்பட்டது.
ஈபிஎஸ்-க்கு பாஜக கொடுத்த புத்தாண்டு பரிசு:
இந்த நிலையில் புத்தாண்டு பரிசாக அதிமுக பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் நீண்ட நாட்களாக இந்திய அரசியலில் பேசு பொருளாக இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கிறது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய சட்ட ஆணையம், அதிமுகவின் பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்ததாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி கட்சிப் பொறுப்பு விவகாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றார் என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: மாமியாராக அதிமுக.. மருமகளாக திமுக.. ஈபிஎஸ் கூறியது என்ன?