சென்னை: மறைமலை நகரை சேர்ந்தவர் தினேஷ். அடையாறு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அண்மையில், கிண்டியில் இருந்து திருவான்மியூருக்கு சென்ற பேருந்தில் தினேஷ் பயணம் செய்தார். சின்னமலை பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, பேருந்தில் ஏறிய டிக்கெட் பரிசோதகர்கள், பயணிகளிடம் டிக்கெட்டை பரிசோதனை செய்தனர். அப்போது தினேஷிடம் டிக்கெட் இல்லை.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பிற பயணிகளிடம் பணத்தை கொடுத்து நடத்துநரிடம் டிக்கெட் வாங்க கூறியிருப்பதாக விளக்கம் அளித்தார். ஆனால் அதை கேட்காத டிக்கெட் பரிசோதகர்கள், தினேஷை பேருந்தில் இருந்து கீழே இறக்கினர். அப்போது டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தினேஷை தாக்கியதுடன், செல்போன் மற்றும் உடைமைகளை பறித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பயணி டிக்கெட் எடுக்க தவறினால் அவருக்கு அபராதம் விதிக்கும் உரிமை மட்டுமே டிக்கெட் பரிசோதகருக்கு உண்டு என்றும், தாக்குதல் நடத்துவது தவறு எனவும் பலர் கருத்துக்களை பதிவிட்டனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட தினேஷ் தன் மீது தாக்குதல் நடத்திய டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோட்டூர் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். டிக்கெட் பரிசோதகர்களின் முரட்டுத்தனமான நடத்தையால் தனது லேப்டாப், கை கடிகாரம் சேதமடைந்ததாகவும், தன்னை குற்றவாளி போல நடத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளை ஆதாரமாகக் கொண்டு இவ்விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ளது. சென்னை மாநகர அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் நிர்வாக இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம், பயணியை டிக்கெட் பரிசோதகர் தாக்கிய சம்பவம் குறித்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை அறிக்கையை சமர்ப்பிக்க தாமதம் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ உதவி என மெசேஜ்.. சென்னை ஐஐடி மாணவியிடம் 50 ஆயிரம் சுருட்டல்!