சென்னை: ஐஐடி வளாகத்தில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் கட்டப்பட்ட புத்தாக்க வசதி மையத்தினை துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் திறந்து வைத்தார். இந்த மையம் சங்கர் மற்றும் சுதா புத்தாக்க மையம் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
இதன் திறப்பு விழாவிற்கு பின்னர் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசும்போது, ”மாணவர்களின் பல்வேறு ஆராய்ச்சிகளின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மையத்தைக் குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்துள்ளார். இந்த மையம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. மாணவர்களுக்கு தோன்றும் கண்டுபிடிப்பிற்கான சிந்தனைகளைக் கொண்டு, அதன் அடிப்படையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறோம்.
சென்னை ஐஐடியில் 300க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் சமூகத்திற்கு பயன்படும் வகையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த மையம் 2008ஆம் ஆண்டில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் சிறிய மையமாக துவக்கி வைக்கப்பட்டது. 10 ஆயிரம் மாணவர்கள் இந்த மையத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
சூரியசக்தியில் இயங்கும் வாகனம், மின்சார வாகனம், ஹைப்பர் லூப், பந்தய மின்சார வாகனம் போன்ற கண்டுபிடிப்புகளை செய்துள்ளோம். மேலும் உச்சநீதிமன்றம் நேற்று மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ரத்துச்செய்ய வேண்டும் என கூறியுள்ளது. இதற்காக சென்னை ஐஐடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரோபோ இயந்திரத்தை வைத்து சுத்தம் செய்யலாம்.
நாட்டிற்கும், நாளைய வாழ்க்கைக்கும் தேவையானவற்றை கண்டுபிடித்து வருகிறோம். மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுவதற்கான ஒபன் ஹவுஸ் 12ஆம் தேதி நடைபெறுகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணியாட்கள் உரிமைகளை தெரிந்துகொள்ள வேண்டும்'