கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் தங்கமணி. இவர் தற்போது குமாரபாளையம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராவார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் - ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள தங்கமணிக்குச் சொந்தமான 69 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கிரிப்டோ கரன்சியில் சொத்துகள் வாங்கல்
இவர் அமைச்சராக பதவி வகித்தபோது தனது பெயர், தனது குடும்பத்தார், உறவினர்களது பெயர்களில் கோடிக்கணக்கிலான சொத்துகளை வாங்கிக் குவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முறைகேடாகச் சம்பாதித்த பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து அதன் மூலம் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து சொத்துகளை வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். கிரிப்டோ கரன்சி குறித்து கீழே காண்போம்.
வெளிப்படைத் தன்மை கொண்ட டிஜிட்டல் நாணயங்கள்?
இந்த கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் வடிவிலான கரன்சிகள். இதனை விர்ச்சுவல் கரன்சி (மெய்நிகர் பணம்) எனவும் அழைப்பர். ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் அந்த நாட்டில் மட்டுமே செல்லத்தக்கது. இந்த கிரிப்டோ கரன்சிகள் அனைத்து இடங்களிலும் செல்லத்தக்கவை. இதன்மூலம் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம்.
கிரிப்டோ கரன்சிகளை கள்ளத்தனமாக போலியாக உருவாக்க முடியாது. ஒவ்வொரு கிரிப்டோ கரன்சிக்கும் குறிப்பிட்ட மதிப்பு உண்டு. சந்தைக்கு ஏற்ப ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பும் ஏறி இறங்கும். விர்ச்சுவல் அல்லது கிரிப்டோ கரன்சி என அழைக்கப்படும் டிஜிட்டல் நாயணங்கள் வெளிப்படைத் தன்மை கொண்டவை எனக் கூறப்படுகிறது.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு குறித்த எந்த வரையறையும் வகுக்கப்படாத நிலைதான் தற்போதுவரை இருக்கிறது. பெரும்பாலான தொழிற் நிறுவனங்கள் உள்பட பலரும் கிரிப்டோ கரன்சியை ஏற்றுக்கொண்டு முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
அமலாக்கத் துறையினர் விசாரணை
இதுவரையிலும் கிரிப்டோ கரன்சிக்கு மத்திய அரசு தடைவிதிக்கவில்லை. சட்டவிரோத பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதனை விசாரணையில் கண்டுபிடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எவ்வளவு தொகையினை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார்? என சைபர் பிரிவு மூலம் டிஜிட்டல் ஆவணங்களைக் கைப்பற்ற, லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர். கிரிப்டோ கரன்சிகள் தொடர்பாக அமலாக்கத் துறையினர் தனி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்வர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "கனிமவளத்துறையில் எந்த ஒரு குறையுமில்லை..!":இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி