பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இணையவழி மூலமாக இன்று (செப்டம்பர் 6) நடைபெற்றது. இதில் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியத் தீர்மானமாக எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பான அந்த தீர்மானத்தில், "இந்தியாவில் இந்தி அல்லாத பிற மொழி பேசும் மக்கள் மீதான மொழி சார்ந்த அத்துமீறல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. அண்மையில் இணையவழியில் நடைபெற்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான பயிற்சி முகாம் முழுவதும் இந்தியில் நடத்திய மத்திய ஆயுஷ் அமைச்சக அலுவலர்கள், இந்தி தெரியாத பிற மொழி பேசும் மருத்துவர்கள் வெளியேறலாம் என்று ஆணவத்துடன் கூறினர்.
இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால், எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் இந்தியாவின் அலுவல் மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, தமிழ்நாட்டு அரசுப் பணிகள் தமிழர்களுக்கே என்ற புதிய சட்டம் இயற்ற வேண்டும். நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3000ஆக உயர்த்த வேண்டும். மத்திய அரசில் சித்த மருத்துவத்திற்கு தனித்துறை ஏற்படுத்தப்பட வேண்டும். சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.