கரோனா வைரசும், அதனால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. அதனால் பல சாமானிய மக்களுக்கு கிடைக்கக்கூடிய அரை வயிற்று உணவிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. அதற்கு உதாரணமாக சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பழைய துணிகள் தைத்துத்துக்கொடுக்கும் தையல்காரர் சுப்பிரமணியின் கதையைக் கூறலாம்.
67 வயதான சுப்பிரமணி, ஊரடங்கு இல்லாத காலத்தில் தினமும் காலை ஐஸ்ஹவுஸ் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குத் தனது தையல் தள்ளுவண்டியுடன் கிளம்பிவிடுவார். அப்பகுதிகளில் அவரைப்போல சாமானிய மக்கள் தைக்க கொடுக்கும் பழைய துணிகளை தைத்துக்கொடுத்து அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைத்துவந்தார். வருமானம் அவ்வளவாகயில்லை ஆனால் உணவு கிடைத்தது. தற்போது அதற்கும் வந்தது வினை.
கரோனா ஊரடங்கு காரணமாக அவரால் வெளியில் சென்று தனது தொழிலைச் செய்ய முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் வேலைக்குச் சென்றால்கூட அவர்களின் பழைய கிழிந்த துணிகளை நினைத்து கூச்சப்படுவார்கள், தைக்க வருவார்கள். ஆனால் அவர்களும் வீட்டிலிருந்தால் என்ன செய்வார் சுப்பிரமணி.
"யாராவது எதிர்பாராதவிதமாக துணிகளைத் தைக்க வந்தால்தான் எனது வீட்டில் அடுப்பு எரிகிறது" என அவர் கூறுகையில் மனம் கலங்கிப்போய்விடும். அவர் மட்டுமல்ல அப்பகுதியில் பல சுப்பிரமணிகள் இருக்கிறார்கள் என்பது கூடுதல் வருத்தம். என்ன செய்வது என யோசித்த சுப்பிரமணி, தன்னிடம் இருக்கும் சொற்ப காசுகளை வைத்து புதுத்துணிகள் வாங்கி, அதில் முகக் கவசங்கள் தைக்க ஆரம்பித்துவிட்டார்.
ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை முகக்கவசங்களை விற்பனைக்கு வைத்துள்ளார். நம்பிக்கையாக இருந்த அவருக்கு முகக் கவசங்கள் விற்பனை கைக்கொடுக்கவில்லை. ஏதோ கிடைக்கிறது என்ற நிலைதான். இது குறித்து சுப்பிரமணி, "ஊரடங்கு இப்படியே தொடர்ந்தால் குடும்பம் நடத்துவது கடினமான ஒன்று.
உழைப்பது என் கடமை, உழைப்பிற்கு ஊதியம் கிடைப்பதும், கிடைக்காததும் என் கையில் இல்லை. உணவுக்கு வழி கிடைக்கும்வரை வாழ்வேன்! இல்லைன்னா போக வேண்டியது தான்!, நம்ம கையில என்ன இருக்கு" என்கிறார் விரக்தியாக.
ஊரடங்கை பலர் விடுமுறையாகக் கழித்துவரும் அதே நேரத்தில், அதே ஊரடங்கை வாழ்க்கையின் இறுதி நாள்களென சிலர் எண்ணுவதும், அதற்கான சூழ்நிலை அமைந்திருப்பதும் மிகுந்த வருத்தத்தை மனத்தில் பதியவைக்கிறது.
இதையும் படிங்க: ஊரடங்கு எதிரொலி: சில்லறை வர்த்தகம் 90 விழுக்காடு வீழ்ச்சி