சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 2022-23ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் அரையாண்டு சொத்துவரியினை நவம்பர் 15 தேதிக்குள் செலுத்தி, 2 சதவீத தனிவட்டியினை தவிர்க்குமாறு ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, செலுத்தப்படும் சொத்து வரியில் 5% அல்லது அதிகப்பட்சமாக ரூ.5000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் ஆக்டோபர் 1 தேதி முதல் செலுத்தப்பட்டு
வருகிறது. 1 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 5.17 லட்சம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் சொத்து வரியினை செலுத்தியுள்ளனர்.
மேலும், இரண்டாம் அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள்ளாக (01.10.2022 முதல் 15.10.2022 வரை), சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு ரூ. 4.67 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும்.
எனினும் சொத்துவரி பொது சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி மதிப்பீட்டிற்குரிய உயர்த்தப்பட்ட சொத்துவரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த அடுத்த மாதம் 15 தேதி வரை நீட்டித்து கால அவகாசதை மாநகராட்சி வழங்கி உள்ளது.
மேலும் வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி அவர்களின் பெயரில் காசோலைகள் மற்றும் வரைவோலைகள், கடன்/பற்று அட்டை மூலமாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான வரிசீட்டினை (Receipt) பெற்றுக் கொள்ளலாம் எனவும் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் சொத்துவரி ரசீதுகளில் உள்ள QR Code பயன்படுத்தியும், பெருநகர சென்னை மாநகராட்சியின் வலைத்தளம் (www.chennaicorporation.gov.in) மூலமாக, எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமலும் (Nil Transaction fee), செலுத்தலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் நிறுத்த கூடாது - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி