சென்னை: 2023-24 ஆம் கல்வியாண்டில் பொறியியல் சேர்க்கைகான மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2023-க்கான தரவரிசை பட்டியல் இன்று (ஜூன் 26) வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2லட்சத்து 29ஆயிரத்து 175 ஆக உள்ளது. அதில் பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847, இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 18 ஆயிரத்து 767 பேர் அதாவது 11.09 விழுக்காடு பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 மாணவர்கள் தகுதியானவர்கள் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் 31ஆயிரத்து 445 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் கல்வி துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 28ஆயிரத்து 425 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 5ஆயிரத்து 842 (25.86 விழுக்காடு) கூடுதலாகும்.
இந்த ஆண்டு விளையாட்டுப் பிரிவின் கீழ் 5024 வீரர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களின் விளையாட்டுச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 2203 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 1198 மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 351 பேருக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளுக்காக வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் 102 பேர் 200 க்கு 200 கட்ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
அதில் 100 மாணவர்கள் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 2 பேர். இவர்களில் 32 பேர் மருத்துவப் படிப்புகளில் சேர தகுதி பெற்றவர்களாக இருக்கின்றனர். மாணவர்கள் தங்களின் தரவரிசையை https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்கள் தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலும் அல்லது வேறு குறைகள் இருந்தாலும் இன்று முதல் ஐந்து நாட்களுக்குள் ஜூன் 30ஆம் தேதிக்குள் தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்தினை (TFC) அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பொறியியல் படிப்புகளுக்கு வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் மாணவர்கள் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 384 பேர், மாணவிகள் 72 ஆயிரத்து 558 பேர், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 17 பேர். தரவரிசைப் பட்டியில் திருச்செந்தூரை சேர்ந்த நித்ரா, தருமபுரியை சேர்ந்த ஹரிநிகா, திருச்சியைச் சேர்ந்த ரோஷ்னி பானு ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
தரவரிசை பட்டியலில் அரசு பள்ளிகளை படித்தவர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் தருமபுரியை சேர்ந்த மாணவி மகாலட்சுமி, நாகப்பட்டினத்தை சேர்ந்த மாணவி நிவேதிதா, கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவர் சரவணகுமார் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பொறியியல் தரவரிசை பட்டியலில் மொத்தம் முதல் மூன்று இடங்களை மாணவிகளே பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான அங்கீகாரம் வழங்குவதற்கு ஜூன் 30 ந் தேதி வரையில் காலக்கெடு உள்ளது. அது முடிந்தப்பின்னர் தான் எத்தனை இடங்கள் என்பது தெரியும், 480 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர வேண்டும் என்றால் கணித பாடத்தை கட்டாயம் பயின்று இருக்க வேண்டும் . AICTE விதிமுறைகள் மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் வேண்டுமானால் பொருந்தும்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் கணித பாடப்பிரிவை பயின்றிருந்தால் மட்டுமே பொறியியல் பாடப் பிரிவில் சேர முடியும். இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக இருக்கிறது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர்களுக்கான பதவி உயர்விற்கு நடத்தப்பட்ட தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விசாரணை செய்வதற்கு உயர் கல்வித்துறையில் இருந்து குழு அமைக்கப்பட்டும்.
அந்த குழு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் மீதான தீர்ப்பு வந்த உடன் பணிகள் தொடங்கும். அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை : பயனாளர்கள் யார்?