சென்னை: நாடு முழுவதிலும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் கணிசமான அளவில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேவையான அளவில் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழ்நாட்டில் திரையரங்குகள், சந்தைகள், மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மக்கள் தாமாக முகக் கவசம் அணிந்து தொற்று பரவாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையிலும் கணிசமான அளவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும்; மத்திய, மாநில அரசுகள் கொடுத்துள்ள வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையிலும் நேற்று மட்டும் 57 நபர்களுக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 295 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் பரவலானது சற்று அதிகமாகவே காணப்படுகிறது. பொது இடங்களில் கூடும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்றும்; தொற்று பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது அதற்கான அறிகுறி இருந்தால் முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும்; வீட்டில் இருந்து சிகிச்சை எடுப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்தின் வாயிலில் தொற்று பாதிக்கப்பட்டதற்கான நோட்டீஸ் ஒட்ட வேண்டும்; அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்து வெளியே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அலுவலர்களை சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி கரோனா தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பு வெளியிட்டாலும் அது மாநகராட்சிக்கும் பொருந்தும் என்றும்; அதன்படி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் மாநகராட்சி மருத்துவ மையங்களில் மாஸ்க் அணிய அறிவுறுத்தியுள்ளோம் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ''சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்ற EPS-யின் ஆசை நிறைவேறாது''