சென்னை: பள்ளி மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்த வேண்டும் எனவும், மாதந்தோறும் மாணவர்கள் படித்த புத்தகங்களைப் பற்றிப் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளிக்கு தலைமைச் செயலாளார் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.
முன்னதாக, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் ஐஏஎஸ் அதிகாரியாகவும் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்ட வெ.இறையன்புவை தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமித்தார். இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனிச் செயலாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களின் நலனுக்காகவும்,வளர்ச்சிக்காகவும்,பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மட்டுமின்றி அவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றிப் பெறுவதற்கும் பயிற்சி அளிப்பதற்காக ”நான் முதல்வன்” என்ற திட்டத்தையும் செயல்படுத்தினார்.மேலும் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் ஐஏஎஸ் பணிக்கான போட்டித்தேர்விற்கான பயிற்சியை அளித்தார்.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்களிடம் விரைந்து சென்று சேரும் வகையில் சீர்திருத்தங்களையும் பணிகளையும் மேற்கொண்டார். பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் பேசுவதில் ஆர்வம் கொண்டவர். பள்ளி மாணவர்களிடம் படிக்கும் ஆர்வத்தை உருவாக்கும் வகையில் ஏற்கனவே பள்ளிகளில் நூலக வகுப்பினை தொடர்ந்து அனுமதிக்கும்படி தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் பொது அறிவை வளர்க்கும் நோக்கத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக தேன்சிட்டு இதழ், ஊஞ்சல் இதழ் ஆகிய இதழ்களையும் பள்ளிக்கல்வித்துறை அச்சிட்டு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தலைமைச்செயலாளராக பொறுப்பேற்ற இறையன்பு நாளையுடன் (ஜூன் 30) ஓய்வு பெறுகிறார். புதிய தலைமைச்செயலாளராக ஷிவ் தாஸ் மீனாவை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, ''மாணவர்கள் மின்னணு உபகரணங்களை அதிகமாக பயன்படுத்துவதால் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால்,பொது அறிவு தொடர்பான செய்திகள் அவர்களுக்கு அதிகமாகத் தெரிவதில்லை. இதனால் வாசிப்புப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதில் மாதந்தோறும் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றிப் பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கவேண்டும்.
இவ்வாறு செய்வதன்மூலம் வாசிப்பது மட்டுமில்லாமல் தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு சாத்தியக்கூறுகள் ஏற்படும். சிறந்த முறையில் நூலை மதிப்புரை செய்கிற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்களைக் கொடுத்து ஊக்குவிக்கலாம். இது அவர்களிடம் சமூகம் தொடர்பான சிந்தனைகளையும் ஆக்கப்பூர்வமான எண்ணங்களையும் ஏற்படுத்தும் என்பதால் இதை விரிவாகச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:புதுக்கோட்டையில் அம்மோனிய வாயு கசிவு - பலருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டு மக்கள் அவதி..